திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாகத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.
நாட்டு நலத்தையும், தனிப்பட்ட நலன்களையும் நாடி தொடர்ந்து ஆறு வாரங்கள் நெய் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்தது நிறைவேறும் என்ற ஐதீகத்தால், இக்கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும், கிருத்திகை நாட்களிலும் பக்தர்கள் பெருமளவில் திரள்கின்றனர்.
இன்று நடைபெற்ற வைகாசி விசாக விழாவையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி கோயில் வளாகத்துக்கு வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் சிவப்பு கம்பளத்தில் வரவேற்று, பூரண கும்ப மரியாதையுடன் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் விநாயகர், ஆதிமூலவர், வள்ளி மணாளன் ஆகிய தெய்வங்களை தரிசித்துப் பிறகு மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்.
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இவ்விலையாச் சுத்த ஸ்தலத்தில் சாமி தரிசனம் செய்த ஆளுநர், பின்னர் சென்னைக்கு திரும்பினார்.
ஆளுநரின் வருகையையொட்டி, சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோயில் வளாகத்தில் காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி கோயில் சுற்றுவட்டார கடைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.