நியூடெல்லி, ஜூன் 9: 2026-க்குள் 500 ரூபாய் நோட்டுகளை கைவிட உள்ளதாக பரவிய தகவல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இருவரும் தற்போது அதற்கான தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளன.
சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஏடிஎம் மையங்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் பங்குகளை அதிகரிக்க உத்தரவு வழங்கியது. அதன்படி, 2025 செப்டம்பர் 30-க்குள் ஏடிஎம்களில் 75% அளவுக்கு 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்றும், 2026 மார்ச்சுக்குள் இந்த விகிதம் 90% ஆக உயர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வறிக்கையின் பின்னணியில், சமூக ஊடகங்களில் “500 ரூபாய் நோட்டுகள் முற்றிலுமாக கைவிடப்படவுள்ளன” என்ற போலியான தகவல்கள் வைரலானது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு மற்றும் பிஐபி உண்மைச் சரிபார்ப்பு அமைப்பின் மூலமாக, “500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் வகையில் எந்தத் திட்டமுமோ அறிவிப்புமோ வெளியிடப்படவில்லை” எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், 500 ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல செல்லும் நிலையில் உள்ளன என்றும், அவற்றை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம், பரவிய பீதி மற்றும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மத்திய அரசு, “தகவல் உண்மையா என உறுதி செய்யும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம்” என பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.