கந்தசஷ்டி சூரசங்காரத்தை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சத்ருசங்கார திரிசதீ பூஜை.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் கந்தசஷ்டி உற்சவம் செவ்வாய்கிழமையன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு நாள்தோறும் மூலவருக்கும் உற்சவருக்கும் விசேஷ பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. வெவ்வேறு மலர் அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்து வருகிறார்.
உற்சவத்தின் ஆறாம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சஷ்டி அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பட்டு கிரீடம் அணிந்து ராஜ அலங்காரத்தில் அவர் அருள்பாலித்தார்.
உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நண்பகலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று எலுமிச்சை மாலைகள் அணிந்து சூரசங்கார மூர்த்தியாக எழுந்தருளினார்.
ஆறுமுகர் சந்நிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் யாகபூஜைகளும் நடைபெற்றன. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் ஆறுமுகப்பெருமானுக்கு சத்ரு சங்கார திரிசதீ அர்ச்சனையும் சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கந்தசஷ்டி ஆறாம்நாள் சிறப்பு யாகபூஜையில் உயர்நீதி மன்ற நீதிபதி மாண்பமை ராஜேஷ் விவேகானந்தா அவர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் அர்ச்சகர்கள் பிரசாதங்களை வழங்கினர்.
கந்தசஷ்டி உற்சவத்தின் கடைசி நாள் ஞாயிறு விடுமுறை தினத்தில் வந்தமையால் அதிகாலை முதற்கொண்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அரோகரா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மாலை 6 மணிக்கு வல்லக்கோட்டை வடக்கு மாடவீதியில் சூரசங்காரமும் இரவு மயில் வாகன புறப்பாடும் நடைபெற உள்ளது. திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.
சூரசங்கார உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அறிவுரைப்படி திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் விழா குழுவினரும் கிராம மக்களும் செய்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.கீர்த்திவாசன் அவர்கள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் செய்துள்ளனர்.







