அரசு கால்நடை ஆராய்ச்சி மையத்தின் இறைச்சி விற்பனை நிலையத்தில் அழுகிய கோழி இறைச்சி விற்பனையா?
உடைந்த முட்டைகள், துர்நாற்றம் வீசிய இறைச்சி – வழக்கறிஞர் டெல்லி பாபு பகீர் குற்றச்சாட்டு!
சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இறைச்சி விற்பனை நிலையத்தில், அழுகிய நிலையில் உள்ள கோழி இறைச்சி மற்றும் தரமற்ற முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோழி வளர்ப்பு, கால்நடை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முட்டை, பால் மற்றும் கால்நடை சார்ந்த உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆராய்ச்சி மையம் மற்றும் கல்லூரியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இறைச்சி விற்பனை நிலையத்தில் வழக்கறிஞர் டெல்லி பாபு என்பவர் தனது குடும்பத்திற்காக முட்டை மற்றும் கோழி இறைச்சி வாங்கியுள்ளார்.
வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வாங்கிய முட்டைகளில் பல உடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தொடர்ந்து வாங்கிய இறைச்சியையும் பரிசோதித்துள்ளார். அப்போது இறைச்சியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதுடன், அது கெட்டுப்போன நிலையில் இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, உடனடியாக விற்பனை நிலையத்திற்குச் சென்ற டெல்லி பாபு, தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், அதற்குச் சரியான விளக்கம் அளிக்காமல், உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளுமாறு ஊழியர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உடைந்த முட்டைகளை மாற்றித் தருமாறு கேட்டபோதும், மாற்றித் தர முடியாது என்றும், உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அலட்சியமாகப் பதிலளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சியைப் பதப்படுத்தும் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட காடை இறைச்சியிலும் துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. அந்த இறைச்சி இரண்டு நாட்களுக்கு முன்பே வெட்டப்பட்டது என ஊழியர்கள் தெரிவித்ததாகவும் டெல்லி பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக மாதவரம் எம்-2 காவல் நிலையத்தில் டெல்லி பாபு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடமும் விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் அலட்சியமாகப் பேசியதுடன், உங்கள் அலுவலகங்களில் புகார் அளித்து உங்கள் வேலையையே காலி செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஆராய்ச்சி மையத்தின் விற்பனை நிலையத்திலேயே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இறைச்சி உண்மையிலேயே கெட்டுப்போன நிலையில் விற்பனை செய்யப்பட்டதா? விற்பனைக்கு முன்பாக இறைச்சியின் தரம் முறையாகப் பரிசோதிக்கப்படுகிறதா? உணவுப் பொருட்களைச் சேமிக்கும் குளிர்சாதன வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா? பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, விற்பனை நிலையத்தில் உள்ள இறைச்சி மற்றும் முட்டைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசு நிர்வாகத்தின் பெயரில் இயங்கும் விற்பனை நிலையம் என்பதற்காகத் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது. பொதுமக்களின் உடல்நலத்துடன் விளையாடும் எந்தச் செயலாக இருந்தாலும், அது விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!







