காதலர்கள் தற்கொலை விவகாரத்தில் இறந்த பார்த்திபனின் தந்தை பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்து தரங்கம்பாடி மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பார்த்திபனின் தந்தை மாரிமுத்து பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண் வீட்டார் ஆணவ கொலை செய்துள்ளதாகவும், நேற்று இரவு வெளியூரிலிருந்து வெளிநபர்கள் வந்திருந்ததாகவும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் மோகன்குமார், அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏராளமானோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அவர்களிடம் மாவட்டத்தின் பொறுப்பு எஸ்.பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் உடன்பாடு எட்டாததால் வெளியூரில் வந்த மர்ம நபர்கள் இந்த கொலை செய்திருக்கலாம் என்று கூறி அனைத்து கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் குடும்பத்தார்கள் சேர்ந்து தரங்கம்பாடி மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும் அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்ததுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

















