லக்னோ: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) லக்னோவை தலைமையிடமாகக் கொண்ட HCBL கூட்டுறவு வங்கியின் வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளது. வங்கியிடம் போதுமான மூலதன வசதி மற்றும் வருமான ஈட்டும் திறன் இல்லாததால், வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மே 19ம் தேதி மாலை முதல் வங்கியின் அனைத்து பணியாற்றும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி திங்கட்கிழமையன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியை அதிகாரப்பூர்வமாக மூடுவதற்கும், அதன் நிர்வாகத்துக்கு ஒரு கலைப்பாளரை நியமிப்பதற்கும் உத்தரப்பிரதேச கூட்டுறவு ஆணையர் மற்றும் பதிவாளரிடம் RBI கோரிக்கை விடுத்துள்ளது.
உரிமம் ரத்து செய்யப்பட்டவுடன், வைப்பாளர்கள் தங்களது வைப்புத்தொகைகளில் ரூ.5 லட்சம் வரை பெறும் உரிமை பெறுவார்கள். இது வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (DICGC) மூலம் வழங்கப்படும். வங்கியின் தரவுகளின்படி, 98.69% வைப்பாளர்கள் தங்களது முழு தொகையையும் DICGC-யிடமிருந்து பெறத் தகுதியுடையவர்கள் என RBI தெரிவித்துள்ளது.
ஜனவரி 31, 2025 நிலவரப்படி, DICGC மொத்தம் ரூ.21.24 கோடி காப்பீட்டு தொகையை ஏற்கனவே செலுத்தியுள்ளது.
இதுதவிர, கடந்த மாதம் மட்டும் பல கூட்டுறவு வங்கிகளின் உரிமங்களை RBI ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதில், அகமதாபாத்தின் கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கி, அவுரங்காபாதின் அஜந்தா நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் ஜலந்தரின் இம்பீரியல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஆகியவை அடங்கும்.
HCBL கூட்டுறவு வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளினை பூர்த்தி செய்யத் தவறியிருந்தது. மேலும், வங்கியின் தொடர்ச்சியான செயல்பாடு வைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என RBI தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பணம் வைப்பு செய்யவோ, எடுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.