வாஷிங்டன்: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களில் ஒருவரான மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், தனது சொத்துகளில் 90 சதவீதம் நன்கொடையாக வழங்கும் முடிவை எடுத்துள்ளார். இந்த செயல் நிச்சயம் பாராட்டத் தகுந்தது என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஃபார்ச்சூன் பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில், பில் கேட்ஸ் தனது எண்ணங்களைப் பகிர்ந்தார். ஜுக்கர்பெர்க்கின் சான்-ஜுக்கர்பெர்க் முன்முயற்சி (Chan-Zuckerberg Initiative) தொண்டு திட்டத்தை ஒரு தீவிர நோக்கத்தின் வெளிப்பாடாக அவர் குறிப்பிட்டார். மேலும், இருவரும் தொண்டு மற்றும் உலகின் முக்கிய பிரச்சனைகள் குறித்து அடிக்கடி விவாதிப்பதாகவும் அவர் கூறினார்.
“இது ஒரு அரிய முன்மாதிரியாக இருக்கிறது. மிகப்பெரிய செல்வத்தையும், அதை சமூக நலனுக்காகப் பயன்படுத்தும் மனதையும் இணைத்துச் செயற்படுவது மிகவும் முக்கியமான விஷயம்,” என பில் கேட்ஸ் கூறினார்.
இதே நேரத்தில், பில் கேட்ஸ் தனது சொந்த அறக்கட்டளை, உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை 2045-க்குள் மூட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். அறக்கட்டளையின் தாக்கத்தை விரைவுபடுத்துவது தான் தற்போது அவரது முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் அவர் விளக்கினார்.
“2000-ஆம் ஆண்டு அறக்கட்டளை தொடங்கும்போது, எங்கள் மரணத்திற்கு பின் 10 ஆண்டுகளில் இது இயங்குவதை நிறுத்த வேண்டும் என்று சாசனத்தில் சேர்த்தோம். ஆனால் சமீபத்தில், எங்கள் குழுவின் ஆலோசனைகளுடன் அந்த அணுகுமுறையை மீண்டும் பரிசீலித்தேன். முக்கிய முதலீடுகளை இரட்டிப்பாக்கி, எங்கள் இலக்குகளை விரைவில் அடைய முடியும் என்று நம்புகிறேன்,” என கேட்ஸ் கூறினார்.
தனியார் செல்வத்தை சமூக நலனுக்காக மாற்றும் இந்த முயற்சிகள், உலகளவில் புதிய தொண்டு முயற்சிகளுக்கான பாதையை அமைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.