சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நிகழ்வில் அவருக்கு கௌரவம் அளிக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. அதன் நிறைவு விழாவில், இந்திய சினிமாவுக்கான அவரின் பெரும் பங்களிப்பை பாராட்டி, ரஜினிகாந்த் கௌரவிக்கப்பட உள்ளார்.
மேலும், இந்த ஆண்டைய விழாவில் மறைந்த புகழ்பெற்ற இயக்குநர்கள் குருதத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி ஆகியோரின் நூற்றாண்டு விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதனுடன், விது வினோத் சோப்ரா, ஆமிர் கான், அனுபம் கெர், ரவி வர்மன், ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட பிரபலங்கள் நடத்தும் 21 சினிமா சார்ந்த சிறப்பு வகுப்புகளும் (Masterclasses) நடைபெறும்.
உலகம் முழுவதும் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன. அவற்றில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படமும் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

















