உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ரஷ்யா கடந்த வார இறுதியில் உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியது.
2022ம் ஆண்டு திடீரென உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டு, போரைத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக இப்போர் தொடர்ந்தும் வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, சென்ற வாரம் ஒரே இரவில், ரஷ்யா 367 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் முழுவதும் பயங்கர வான்வழி தாக்குதல் நடத்தியது. இது, இதுவரை ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் மிகப்பெரியதாகும்.
இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில், கிமெல்னிட்ஸ்கி உள்ளிட்ட பல பகுதிகளில் வன்மையான தாக்குதல் நடைபெற்றது. மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொது வசதிகள் சேதமடைந்தன.
இருப்பினும், உக்ரைன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், தாக்குதலால் ஏற்பட்ட சேதம் கடுமையானதாகும்.
இந்நிலையில், அமெரிக்காவின் மெளனத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவிற்கு எதிராக வலுவான தடைகள் வேண்டும் என வலியுறுத்தினார். “உலகின் மெளனமே புதினை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலும் ரஷ்யாவை முடக்க பொருளாதாரத் தடைகளுக்கு காரணமாகும்” என அவர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூ ஜெர்சி மாநிலத்தில் செய்தியாளர்களிடம்,
“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு என்ன ஆகிவிட்டது எனத் தெரியவில்லை. அவர் இதுவரை அதிகமான உயிர்களை எடுத்து விட்டார். அவரது செயல்கள் எனக்குச் சம்மதமல்ல; எந்தப் பண்பும், மகிழ்ச்சியும் இல்லை” என்று தெரிவித்தார்.