சேலம் :
அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தின் நெஞ்சாலை பகுதியில் உள்ள அவரது தனியார் இல்லத்திற்கு, வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உடனான குழுவுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், வெடிகுண்டு எனக் கூறப்பட்ட தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் எந்தவித ஆபத்தான பொருட்களும் கண்டறியப்படவில்லை.
இந்த மின்னஞ்சலை யார் அனுப்பினார் ? எங்கிருந்து அனுப்பப்பட்டது ? என்பதைக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மற்றும் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து காவல் துறை கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முன்னாள் அதிமுக அமைச்சருக்கும் கொலை மிரட்டல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அரசியல் தலைவர்களுக்கு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.