திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிப்பு – 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு…
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும், குருவை சாகுபடி செய்யாததால் வேலைவாய்ப்பு இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.













