இரண்டு தலைமுறைகள் தாண்டி 70 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் இடங்களை ஆக்கிரமிப்பு எனக் கூறி ஜேசிபி இயந்திரத்துடன் இடிக்க வந்த நீதிமன்ற ஊழியர்கள் – எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் – ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பரபரப்பு சம்பவம்
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட, குளிக்கரை கிராமம் தோப்பு தெருவில் கடந்த பல ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அந்த இடம் அரசின் இனாம் நிலமாக இருந்து வந்த இடத்தை, பார்த்தசாரதி சுவாமி ஆலயத்தின் நிலமாக மாற்றப்பட்டு, தற்போது விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான நிலம் என பத்திர மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அது நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி 70 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வரும் செல்வராஜ், சரவணமூர்த்தி, மருதாம்பாள் உள்ளிட்ட மேலும் 4 நபர்களின் இடத்தினை ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி, நீதிமன்ற உத்தரவுடன் நீதிமன்ற ஊழியர்கள் மக்களின் வீடுகளை இடிக்கும் முடிவில் இரண்டு ஜேசிபி எந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் நிலையில் எதற்காக திடீரென்று ஜே சி பி இயந்திரத்துடன் வீடுகளை இடிக்க வந்துள்ளனர் என கேள்வி கேட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அடிமனை பயனாளர்கள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பல தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வீடுகளை அகற்றுவது ஏற்புடையது ஆகாது எனவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நீதிமன்ற மேல் நடவடிக்கைகளுக்கு செல்ல கால அவகாசம் வழங்கிட கோரியும் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் நீதிமன்ற ஊழியர்கள் உறுதியுடன் இருந்தனர். அதேபோல பொதுமக்களும் தங்களது வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களும் உறுதியுடன் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஐந்து மணி நேர பரபரப்புக்கு பிறகு சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளர், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அவகாசம் வழங்குவதாகவும் அதற்குள் நீதிமன்ற மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் அங்கிருந்து கிளம்பினர் பொதுமக்களும் அமைதியாக கலந்து சென்றனர்.
பேட்டி :தம்புசாமி – அடிமனை பயனாளர்கள் குத்தகை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்







