பெங்களூரு :
கர்நாடக அரசின் துணை நிறுவனமான “கர்நாடகா சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்டுகள் லிமிடெட் (KSDL)” தயாரிக்கும் பிரசித்திபெற்ற மைசூர் சேண்டல் சோப்புக்கு, பிராண்டு தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் எதிர்வினைகள் எழுந்துள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மே 22ஆம் தேதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் எம்.பி. பாட்டில் வெளியிட்ட அறிவிப்பில், “தமன்னா, KSDL நிறுவனத்தின் தூதராக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுவார். இதற்காக ரூ.6.2 கோடி வருமானமாக வழங்கப்படுகிறது” என கூறினார்.
“இந்தியாவிலேயே இல்லாமல், உலகளாவிய சந்தையிலும் மைசூர் சேண்டல் சோப்பின் பிரசாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தமன்னாவுக்கு 28 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இளைய தலைமுறையை இழுத்துவரும் திறமை தமன்னாவுக்கு உண்டு” என்றும் அவர் விளக்கியுள்ளார்.
வருமான வளர்ச்சி
2024-25 நிதியாண்டில், KSDL நிறுவனம் ரூ.1,785.99 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதில் 80 சதவீதம் வருவாய் தெற்கு மாநிலங்களில் இருந்து கிடைத்ததாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.5,000 கோடி வருமான இலக்கை எட்டும் திட்டம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வினைகள் – எதற்காக தமன்னா ?
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் எதிர்வினை தெரிவித்து வருகின்றனர். “கர்நாடக அரசின் நிறுவனத்திற்கு ஏன் பிற மாநிலத்தை சேர்ந்த நடிகை ?” எனவும், “கர்நாடகாவில் உள்ள கன்னட நடிகைகளில் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லையா?” எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.
அமைச்சரின் விளக்கம்
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் பாட்டில், “கன்னட திரைப்படங்களின் மீது KSDL நிறுவனத்துக்கு மரியாதை உண்டு. ஆனால், இந்த சோப்பின் நோக்கம் உலக சந்தையில் வளர்ச்சி காண்பது. எனவே, சர்வதேச அளவில் மக்கள் அறிந்த நடிகையை தேர்ந்தெடுத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.