கன்னியாகுமரி மாவட்டம்: அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதல்-அமைச்சரிடம் கொண்டு செல்லப்படும்- நாகர்கோவிலில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகம் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வனம் மற்றும் காதித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். கலெக்டர் அழகுமீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
மதுரைக்கு வருகிற 17-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். தற்போது
நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் அவரிடம் தெரிவிக்கப்படும்.
அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதல்-அமைச்சரிடம் கொண்டு செல்லப்படும்.
வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதைக் கட்டுப்படுத்த கூண்டுகள் வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கவால் குரங்குகள் மலைப் பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது.
வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த முறை தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எனவே எதிர்காலத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
கேரளாவில் தனியார் காடுகள் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பணிகள் செய்ய கெடுபிடி காட்டுவது இல்லை என்று கேட்கிறீர்கள். ஆனால்
கேரளாவில் உள்ள சட்ட திட்டங்களுக்கும், தமிழகத்தில் உள்ள சட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. கேரளாவில் அதிக மலைகள் உள்ளன. இங்கு மலைகள் குறைவு. தமிழகத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

















