நூறு ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகளை வரும் ஏழாம் தேதிக்குள் அப்புறப்படுத்த வட்டாட்சியர் நோட்டீஸ் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புகாரத்தெரு வெண்ணாற்று லயன்கரை என்ற முகவரியில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு பட்டா வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் சுண்ணாம்புக்கர தெரு வெண்ணாற்று லயன்கரை என்ற முகவரியில் சுமார் நூறு ஆண்டுகளாக குடியிருந்து வரும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம் செலுத்தும் அனைத்து உரிமைகளும் இருந்தும் அரசு பட்டா மறுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பலமுறை இப்பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பழைய நீடாமங்கலம் பகுதியில் வசிக்கும் கமாலுதீன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீர்நிலை புறம்போக்கில் வசிப்பதாக கூறி வரும் ஏழாம் தேதிக்குள், அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள், வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் பொருட்கள், நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்கள் அல்லது விளைபொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துமாறு நீடாமங்கலம் வட்டாட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
இதனைக் கண்டித்தும், நீடாமங்கலம் வட்டாட்சியர் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு பட்டா வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மன அளிப்பதற்காக வந்திருந்தனர்.
நூறு ஆண்டுகளாக அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை நீர்நிலை புறம்போக்கு என காரணம் காட்டி அரசு அப்புறப்படுத்துவதாக குற்றம்சாட்டி திடீரென பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்கும் முயன்றதால் அவர்களுக்கும், காவல் துணையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் பாட்டில்களை போலீசார் கைப்பற்றியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.
பேட்டி : மகாலட்சுமி – பாதிக்கப்பட்ட பகுதி மக்கள்

















