நாகை மாவட்ட திமுக மாவட்ட துணைச் செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான ஆரூர் மணிவண்ணன் சிறையில் அடைப்பு; பெண்ணை தாக்கிய வழக்கில் திருக்கண்ணபுரம் போலீசார் நடவடிக்கை
நாகை மாவட்டம் திருமருகல் அருகே பில்லாளி பகுதியை சேர்ந்தவர் ஆருர் மணிவண்ணன். இவர் திமுக மாவட்ட துணைச் செயலாளராகவும், தலைமை கழக பேச்சாளராகவும் உள்ளார். இவரது தம்பி மணியரசன். இவரது குடும்பத்திற்கும், அருகில் வசித்து வரும் ராஜேஸ்வரி குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி, வீடு புகுந்து ராஜேஸ்வரி உள்ளிட்டோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேஸ்வரி திருக்கண்ணபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆருர் மணிவண்ணன், அவரது தம்பி மணியரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














