ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 தொடரின் 50வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மோதலில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி பவர்ப்பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 217 ரன்கள் குவித்தது. ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்களும், ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்களும் விளாசினர். இதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களின் வெகு வேகமான ரன்கள் மூலம் மும்பையின் ஸ்கோரை மெருகேற்றினர்.
பின்னர் ராஜஸ்தான் அணி பதிலுக்கு விளையாட, தொடக்கமே தோல்வியுடன் துவங்கியது. முதல் ஓவரிலேயே தீபக் சஹரின் பந்தியில் வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் போல்ட் வீசிய 2வது ஓவரில், ஜெய்ஸ்வால் 2 சிக்சர்களை விளாசினாலும் கடைசி பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
மீண்டும் 4வது ஓவரில் நிதிஷ் ராணா மற்றும் 5வது ஓவரில் ரியான் பராக், ஹெட்மயர் ஆகியோர் பும்ராவின் திட்டமிட்ட பவுலிங்கில் வெளியேறினர். ஹெட்மயருக்காக அமைக்கப்பட்ட ஷார்ட் லெக் ஃபீல்டர் இவரது விக்கெட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனை பார்த்து ஓய்வறையில் இருந்த லசித் மலிங்கா, ஜெயவர்தனே ஆகியோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
இதனையடுத்து சுபம் துபே, துருவ் ஜுரெல் ஆகியோர் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியடைந்து, ராஜஸ்தான் 76/7 என்ற நிலையில் களைதடுமாறியது. பின்னர் தீக்ஷனா மற்றும் கார்த்திகேயே தலா 2 ரன்களில் வெளியேறினர். இறுதியில் ஆர்ச்சர் சில சிக்சர்களை விளாசினாலும், 30 ரன்களில் அவர் வெளியேற, ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்தப் பெரிய வெற்றியின் மூலமாக, மும்பை அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து, 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மாறாக, ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் வாய்ப்புகளை இழந்து வெளியேறியது.