புழல் தோல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!
சென்னை, புழல்:
சென்னை புழல், லட்சுமி அம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில், பார்க் இன்டர்நேஷனல் மற்றும் டிசைனிங் ஜென்ஸ் சான்ஸ்லர்ஸ் என்ற பெயர்களில் தோல் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலை குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் சுமார் 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 11 மணியளவில் தொழிற்சாலையின் உட்புறத்திலிருந்து திடீரெனப் புகை வெளியேறியுள்ளது. இதைக் கண்ட தொழிலாளர்கள் உடனடியாகத் தொழிற்சாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தொழிற்சாலையின் உட்புறத்தில் தீ வேகமாகப் பரவி, மளமளவெனப் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அடர்ந்த கரும்புகை, துர்நாற்றத்துடன் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவியதால், அப்பகுதி பொதுமக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்தத் தீ விபத்தில், தோல் பதப்படுத்துதல் மற்றும் வடிவமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், தோல் மற்றும் இதர மூலப்பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் என்ன? தொழிற்சாலையில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம், சேதத்தின் முழு மதிப்பு மற்றும் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

















