கீழ்வேளூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் பயங்கர உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்; மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் ஓர்குடி வெட்டாறு பாலம் அருகே செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சச குழாயில் பெரும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி அருகிலுள்ள விளைநிலங்களில் பாய்ந்து வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இம்மாவட்ட மக்களின் பிரதான தாகத்தைத் தீர்ப்பதில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மட்டுமே முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
இச்சூழலில், மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற ராட்சசக் குடிநீர் குழாய்கள் உடைந்து பெருமளவில் தண்ணீர் வீணாவதால், பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஓர்குடி பாலம் அருகே பெருத்த சத்தத்துடன் பீறிட்டு வெளியேறும் குடிநீரை உடனடியாகத் தடுத்து, குழாய் உடைப்பைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், குழாய் உடைப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்றும், பழுதடைந்த குழாய்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















