நாகை அருகே ஆதமங்கலத்தில் ஸ்ரீ சப்தகன்னியம்மன், ஸ்ரீ சாட்டைக்காரன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், ஆதமங்கலம் ஜீவாநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னியம்மன் மற்றும் ஸ்ரீ சாட்டைக்காரன் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று (நவம்பர் 15) முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, அனுக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் கோ பூஜை ஆகியவை விமரிசையாக நடத்தப்பட்டன.
பின்னர், மகா பூர்ணாஹுதி நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, மங்கல வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களைச் சுமந்து கோபுர கலசத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து, மல்லாரி இசைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சப்தகன்னியம்மன் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவர் ஸ்ரீ சப்தகன்னியம்மன், ஸ்ரீ சாட்டைக்காரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் ஆதமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.







