மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை? அசிக்காடு மஞ்சள் வாய்க்கால் அருகே வயலில் கழுத்தில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு. உரிய நீதி கேட்டு உறவினர்கள் கோரிக்கை. உடலை கைப்பற்றி குத்தாலம் போலீசார் தீவிர விசாரணை?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வானாதிராஜபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வளர்மதி (வயது 38). இவரது கணவர் பழனிவேல் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த வளர்மதி, குடும்பச் சூழல் காரணமாக மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகே உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
வழக்கம்போல் நேற்று வேலைக்குச் சென்ற வளர்மதி, இரவு 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காலை வருமாறு காவல்துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசிக்காடு மஞ்சள் வாய்க்கால் அருகே உள்ள திருஞானம் என்பவரது வயலில் வளர்மதி கழுத்தில் காயங்களுடன் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதியை கழுத்தில் கத்தியால் குத்தி உடலை வயலில் வீசி சென்றுள்ளதாக காவல்துறை வட்டார விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கப் பேசிய உயிரிழந்த வளர்மதியின் உறவினர் பழனியம்மாள் கூறுகையில்
”கணவரை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வேலைக்குச் சென்று வந்த வளர்மதியை யாரோ கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்து, உடலைத் தூக்கி வயலில் வீசியுள்ளனர். இதுகுறித்து செல்போன் மூலமாகவே எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஆதரவின்றி தவிக்கும் எங்களுக்கு இந்தச் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளைக் கண்டறிந்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”
எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வளர்மதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை இழந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.







