திருவாரூர் மாவட்டம் விளாகம் கிராமத்தில் விசிக தலைமை நிலைய பொறுப்பாளர் தமிழ்க்கதிர் உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி..
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர் பிடி. ரவி என்கிற தமிழ்க்கதிர் மறைவுக்கு, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளராக இருந்த பிடி. ரவி என்கிற தமிழ்க்கதிர், நேற்று இரவு சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள விளாகம் கிராமத்திற்கு தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது வழியிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.
அவரது திடீர் மறைவு செய்தி அறிந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து, இன்று விளாகம் கிராமத்தில் தமிழ்க்கதிரின் உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, வீரவணக்கம் செலுத்தினார். பின்னர், தமிழ்க்கதிரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், கட்சி சார்பில் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தமிழ்க்கதிரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.







