தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் வில்லன் வேடங்களில் மின்னும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே. சூர்யா. அவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றவை.
இந்த நிலையில், எஸ்.ஜே. சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கில்லர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது சிறப்பு அம்சமாகும்.
இந்நிலையில், ‘கில்லர்’ திரைப்படத்தின் முதல் லுக் (First Look) போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வெளியான அறிவிப்பு போஸ்டரில்,
“ஒருவன் காதலுக்காக… மற்றொருவன் மிஷனுக்காக” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது, இது படத்தின் உள்ளடக்கத்தைப்பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் யார் நடித்துள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக எஸ்.ஜே. சூர்யா, ‘சர்தார் 2’ மற்றும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்து பணிகளை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.