கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் துயரச் சம்பவம் தொடர்பாக, “இது ஒரு தனி மனிதனின் தவறு அல்ல, கூட்டு தவறு தான்” என காந்தாரா திரைப்பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது, கூட்டநெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் NDTV ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ரிஷப் ஷெட்டி கூறியதாவது :
“ஒரு ஹீரோவையோ அல்லது அவரது கதாபாத்திரத்தையோ நாம் அளவுக்கு மீறி விரும்பும்போது, அதுவே ஹீரோ வழிபாட்டாக மாறுகிறது. இதுபோன்ற வழிபாட்டைத் தவிர்ப்பது நல்லது. கரூரில் நடந்த சம்பவம் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதை ஒரே நபரின் தவறாக கூற முடியாது. இது ஒரு கூட்டு தவறாக இருக்கலாம், அதனால்தான் இதை விபத்து என்கிறோம்.”
மேலும் அவர் கூறினார்:
“நாம் யாரை குற்றம் சொல்வது? காவல்துறை அல்லது அரசாங்கம் மீதும் குறை கூறலாம், ஆனால் சில நேரங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் அவர்களுக்கும் சிரமம் இருக்கும். எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்,” என தெரிவித்துள்ளார்.
தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சேப்டர் 1’ திரைப்படம் 6 நாட்களில் ரூ.427 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிவருகிறது.