கரூர் :
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இந்த விபத்தில், முதல் நாளில் 39 பேர் உயிரிழந்தனர். பின்னர், சணப்பிரட்டி தொழிற்பேட்டையைச் சேர்ந்த நவீன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை, சிகிச்சை பெற்று வந்த வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோரின் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருங்கிணைந்த ஆணையத்தை அமைத்துள்ளது. அந்தக் குழுவினர் சம்பவ இடம், மருத்துவமனை மற்றும் உயிரிழந்தோர் வீடுகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், முதலில் நியமிக்கப்பட்ட கரூர் டிஎஸ்பி செல்வராஜுக்கு பதிலாக, புதிய விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி பிரேமானந்தன் பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று முதல் விசாரணை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
















