தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் உறுப்பினர் தேர்வில், திமுக, அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க சார்பில் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ள வில்சன், கவிஞர் சல்மா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த அதன் தலைவர் கமல்ஹாசனும், மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்கிறார்.
அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தனபால் ஆகியோர் பதவியேற்கின்றனர்.
மொத்தம் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால், சுயேச்சையாக போட்டியிட்ட 7 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதனால் திமுக, அதிமுக மற்றும் ம.நீ.ம வேட்பாளர்கள் போட்டியின்றியே தேர்வாகியுள்ளனர்.
பதவியேற்பை முன்னிட்டு நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இதையடுத்து தனது நண்பர் ரஜினிகாந்துடன் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்த கமல், “புதிய பயணத்தை நண்பருடன் பகிர்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.