காஞ்சிபுரம் : தவெக தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “அங்கிள்” என அழைத்தது குறித்து எழுந்த சர்ச்சைக்கு, பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் புதிய உணவக திறப்பு விழாவில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலில் எனக்கு சம்பந்தமே கிடையாது. ஆனால் விஜய் ‘அங்கிள்’ என்று சொன்னது தவறே இல்லை. அது ஒரு தவறான வார்த்தை அல்ல. நிஜ வாழ்விலும் அவர் எப்போதும் ‘குட் மார்னிங் அங்கிள், எப்படி இருக்கீங்க?’ என்று தான் பேசுவார். அதையே பொதுமக்கள் முன்னிலையில் கூறியிருக்கிறார். அதில் வேறு பொருள் தேட வேண்டிய அவசியமில்லை,” என்றார்.
மேலும், “நானும் ஸ்டாலின் அவர்களை பலமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது ‘வணக்கம் அங்கிள்’ என்பதுதான் சொல்லுவேன். அந்த வார்த்தையில் தவறில்லை. விஜய் தனது ரசிகர்களுக்காக கொஞ்சம் கமர்ஷியல் ஸ்டைலில் பேசியிருக்கலாம். அது ஒருவரையும் குறை சொல்லும் வார்த்தையல்ல,” எனவும் அவர் தெரிவித்தார்.
திரைப்படங்களைப் பற்றி பேசிய அவர், “படையப்பா திரைப்படம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடத் தயாராகியுள்ளது. ரஜினி மற்றும் கமலுடன் மீண்டும் இணைந்து வேலை செய்யும் ஆர்வம் எனக்குண்டு. ஆனால் அது அவர்களது முடிவை பொறுத்தது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், இறுதியில் படத்தின் வசூல்தான் முக்கியம்,” என்றார்.