தவெக தலைவர் விஜய் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமது கட்சியை குறிவைத்து வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் தனது உரையில், “தவெகவினர் மீது ‘தற்குறி’ என்ற விமர்சனத்தைச் சொல்வோர், நாளை அரசியலே கேள்விக்குறியாகும் அளவுக்கு மக்களே மாற்றத்தை உருவாக்கப் போகிறார்கள். பொதுமக்கள் நம்மை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டனர்” என்று கூறினார்.
இந்த கருத்து குறித்து கேட்கப்பட்டபோது அமைச்சர் ரகுபதி, “விஜய் ஆச்சரியக் குறியா, தற்குறியா என்று பேசுவது எங்களுக்குப் பிரச்னையில்லை. எங்கள் குறி ஓரே ஒன்று — தேர்தல் குறிதான். திமுக யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய நிலை இல்லை. எங்களுக்குக் கொஞ்சமும் தனிப்பட்ட பகை இல்லை. அரசியல் அரங்கில் அனைவரையும் சமமாகவே பார்க்கிறோம்,” என்று பதிலளித்தார்.
அவர் தொடர்ந்து, “தமிழ்நாட்டுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவது திராவிட மாடல் அரசு. ஏமாற்றுபணிகள் இந்த மாநிலத்தில் பலிக்காது. தவெக என்பது பாஜகவின் ‘C’ டீம் என்றே மக்கள் அறிந்திருக்கிறார்கள்,” எனவும் கடுமையாக விமர்சித்தார்.













