சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் மாபெரும் திரைப்படத்தின் இயக்குனர் பதவியிலிருந்து சுந்தர்.சி விலகியிருப்பது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜெயிலர் 2’க்குப் பிறகு, ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளதாகவும், அந்தப் படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த மாதம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்!” எனக் கமல் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது வெளியான தகவல்படி, ‘தலைவர் 173’ எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்தது.
ஆனால், தற்போது அந்த மாபெரும் திட்டத்திலிருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியிருப்பதாக அறிவித்துள்ளார். தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ரஜினிகாந்த் நடித்த ‘தலைவர் 179’ படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்.”
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. சுந்தர்.சி விலகியதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வராத நிலையில், புதிய இயக்குனர் யார் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.















