ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ் பாபு – ப்ரித்விராஜ் – ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய Pan-India படமான ‘வாரணாசி’ தலைப்பு அறிவிப்பு விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. 100 அடி நீளமான திரை அமைக்கப்பட்டு அதில் தலைப்பு வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிகழ்வில் மகேஷ் பாபு மேடையேறி பேசும்போது நகைச்சுவையும், உணர்ச்சியும் கலந்து உரையாற்றினார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் முன் வந்ததின் மகிழ்ச்சியை பகிர்ந்த அவர், படக்குழு தந்த ஸ்டைல் மாற்றங்கள் குறித்து சிரிப்பூட்டும் வகையில் பேசினார்.
தன் தந்தை சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா குறித்து பேசும்போது, உணர்ச்சிபூர்வமாக, “அவர் எப்போதுமே என்னை ஒரு புராண கதாபாத்திரத்தில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். நான் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இன்று எனது பேச்சை அவர் எங்கிருந்தும் கேட்டு இருப்பார். அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்கும்,” என்றார்.
‘வாரணாசி’ தன் கனவுப் படம் என மகேஷ் பாபு வலியுறுத்தி, “வாழ்க்கையில் ஒரேமுறை மட்டும் வரக்கூடிய அனுபவம் இது. இந்த படத்திற்காக நான் என்னால் இயன்ற அளவு கடினமாக உழைப்பேன். என் இயக்குநர் பெருமைப்படும் படி செய்திடுவேன். படம் வெளியாகும் போது இந்தியா முழுவதும் பெருமையடையும்,” என்று தன்னம்பிக்கை தெரிவித்தார்.
ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பாராட்டிய அவர்,“நீங்கள் கேட்ட அப்டேட் எப்படி? மைண்டு பிளாக் தானே? உங்கள் அன்புக்கு வார்த்தைகள் போதாது. கைகூப்பி நன்றி சொல்லுவதே எனக்குத் தெரியும் ஒரே வழி,” என்று உரையை நிறைவு செய்தார்.
‘வாரணாசி’ தலைப்பு அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில், அடுத்த அப்டேட்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே கூடிவரும் நிலையில் உள்ளது.



















