கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் துறைமுகத்தின் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இவர் மீதும் அ.தி.மு.க. பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 2021ம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதையடுத்து புகார் அளித்த ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதிப்பதாக கூறி கடந்த மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி கவர்னருக்கு அனுப்பப்பட்ட கோப்பு மீதான நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
கவர்னர் தரப்பில் உரிய அனுமதி வழங்காமல் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. வழக்கு ஆவணங்களை மொழி பெயர்த்து வழங்கும்படி கவர்னர் அலுவலகம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேல் நடவடிக்கை எடுக்க கவர்னர் ரவி அனுமதி அளித்தார்.