தங்கம் விலை என்பது மலையைப்போலவும் குறையும்போது கடுகுபோலவும் தோடரந்து இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போது தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. காரணம் என்னவென்று பார்க்கலாம்..
விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எதிரிகள் சுகம் காண’ என்ற பாடலைப் போல தங்கம் கடந்த வாரம் , 2000 ரூபாய் அளவில் சரிந்தது. உடனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பலர் அவ்வளவு தான் இனி குறையப்போகுது; ஜான் மில்ஸ் சொல்லிட்டாரு 38% குறையப்போகுது என யாவரும் சொல்லிக்கொண்டிருக்க, தடாலடியாக தங்கம் மீண்டும் உயரத்தொடங்கியிருக்கிறது.
டிரம்ப் பொருளாதார வரி விதிப்பை அமல்படுத்தும் போது, தங்கத்தை விற்று பங்குச்சந்தையில் பங்குகள் வாங்கும் போக்கு அதிகரித்தது. பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்ததால், முதலீட்டாளர்கள் இந்த வழியை பின்பற்றினார்கள். ஆனால், டிரம்ப் மீண்டும் வரிவிதிப்பிற்கு 90 நாட்கள் விடுப்பு அறிவித்துள்ளதால், தங்கம் மீண்டும் ராக்கெட்டில் ஏறியிருக்கிறது.
உச்சம் தொட்ட தங்கத்தின் அமெரிக்க டாலர் மதிப்பு..
அமெரிக்காவில் தங்கம் ஒரு அவுன்ஸ் புதிய உச்சமாக 3227.07 அமெரிக்க டாலரைத் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு அமெரிக்காவில் தங்கம் கிட்டத்தட்ட 22% உயர்ந்திருக்கிறது. நேற்றைய விலையைவிட 2.14% அதாவது 68 அமெரிக்க டாலர்கள் ஒரே நாளில் உயர்ந்திருக்கிறது.
நாளை இந்திய ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்னும் ஒரு 1000 ரூபாய் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். தங்கம் இப்படி ஓவர்நைட்டில் 2% அதிகரிப்பதையெல்லாம் சற்று ஜாக்கிரதையாக அணுக வேண்டியது அவசியம்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்றே 70000 தொடவிருந்தது. இன்று ஒரு சவரன் 69,960 ரூபாய்க்கு சென்னையில் ஆபரணத்தங்கம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் 9000 ரூபாயை நெருங்கிவிட்டது நாளை இது இன்னும் அதிகமாகவே வாய்ப்புகள் அதிகம். இந்திய பங்குச்சந்தைகளுக்கு நேற்று விடுமுறை தினம் என்பதால், இன்று காலை ETF எனப்படும் exchange traded fundல் 4% உயர்வுடன் தங்கம் வர்த்தகமானது. இந்தியப் பங்குசந்தைகளுக்கு மீண்டும் மூன்று நாள்கள் விடுமுறை. சனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளைத் தொடர்ந்து, திங்கள் அன்று அம்பேத்கர் ஜெயந்தி என்பதால், அன்றும் விடுமுறை தான். அதனால், இந்திய பங்குச் சந்தைகளில் தங்கத்தின் விலை எதிரொலிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்தே கணிக்க முடியும்.
என்ன தான் டிரம்ப் 90 நாள்களுக்கு வரி விதிப்புகளுக்கு விடுமுறை அளித்தாலும், உலக சந்தை ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதால், தங்கம் தான் சிறந்த முதலீடு என முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். அதன் காரணமாகவே தங்கம் இப்படி ஏறிக்கொண்டே செல்கிறது.