அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கான கட்டணங்களை தற்போது தளர்த்தியதால் சர்வதேச சந்தைகளில் நிலவிய இணக்கமான சூழலால் இந்திய பங்குசந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின.
மும்பைப் பங்குச்சந்தையில் ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,750.37 புள்ளிகள் உயர்ந்து, 76,907.63 ஆக இருந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 539.80 புள்ளிகள் உயர்ந்து 23,368.35 ஆக இருந்தது.
சென்செக்ஸை பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்திருந்தன. எல் அண்ட் டி, ஹெடிஎஃப்சி வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இண்டஸ்இன்ட் வங்கி நிறுவன பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. அதேநேரத்தில், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே மற்றும் கோடாக் மகேந்திரா வங்கி நிறுவன பங்குகள் சரிவில் இருந்தன.
ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, தென்கொரியாவின் கோஸ்பி, டோக்கியோவின் நிக்கேய் 225, ஹாங்காங்கின் ஹாங் செங் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் லாபத்தில் இருந்தது. இதனிடையே ஷங்காயின் எஸ்எஸ்இ சரிவில் இருந்தது. அதேபோல் அமெரிக்க பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை லாபத்தில் நிறைவடைந்திருந்தது.
அமெரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஸ்மார்ட் போன்கள், கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கான பரஸ்பர வரிளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிப்பதாக தெரிவித்திருந்தார். அமெரிக்க அரசின் இந்த வரிவிலக்கு அறிவிப்பினைத் தொடர்ந்து, அமெரிக்க, ஆசிய, மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் வெள்ளி மற்றும் திங்கள்கிழமை வர்த்தகங்களை விட 3 – 4 சதவீதம் அதிகரித்துள்ளது.