பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை நடைபெற்ற மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மூத்த மருத்துவர்கள் ராஜசேகர், நீலகிருஷ்ணன், கீதா டேனியல், ராதா, ராஜசிம்மன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், பல் மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய மருத்துவம் மகளிர் மற்றும் மகப்பேறு நலம் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த மருத்துவர்கள் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி சிகிச்சையளித்தனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இலவச மருத்துவ முகாமில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் முகாமிற்கான ஏற்பாடுகளை பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.














