விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் மீது வனத்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக விழுப்புரம் எஸ்பிஐ அலுவலகத்தில் புகார் மனு.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சுரேஷ், தனது வீட்டிற்கு அருகிலுள்ள நிலத்தில் வைக்கோலை பாதுகாக்கும் நோக்கில் இரவு நேரத்தில் இருந்தபோது, அந்தப் பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பிரபாகரன், தசரதன், சங்கர் உள்ளிட்டோர், “இங்கு ஏன் இருக்கிறாய்” எனக் கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அருகில் இருந்த அவரது மனைவியையும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுரேஷ் விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கண்ணாரம்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு அதிகரித்து வருவதாகவும், இதற்கு சில வனத்துறை அதிகாரிகள் துணைபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சட்டவிரோத செயல்களை பற்றி தகவல் வெளியிடுவேன் என்ற அச்சத்தால் தான் தன்னை தாக்கியதாகவும், மணல் கடத்தியதாகவும் மரம் கடத்தியதாகவும் பொய் வழக்கு பதிவிடுவோன் என மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வனத்துறைக்கு சொந்தமான மணலை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, மாட்டுவண்டி ணல் திருட்டுக்கு துணைபோகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை தாக்கிய வனத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














