விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் வனத்துறை – சந்தனம் மற்றும் செம்மரம் நடும் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. வனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டவோ, விற்பனை செய்யவோ முடியாது எனப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்றும், விவசாயிகளின் நலனுக்காக உரிய விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தகவல்.
விழுப்புரம்:
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மா, பலா, தேக்கு, செம்மரம், சந்தனம், மகாகனி உள்ளிட்ட மதிப்புமிக்க மரக்கன்றுகளை வனத்துறை நர்சரியில் வளர்த்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருவதாக விழுப்புரம் வன விரிவாக்கக் கோட்ட வனச்சரக அலுவலர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் கூலி உயர்வு, இடுபொருட்கள் மற்றும் உரங்களின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இதனால் பலர் விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மாற்றுத் திட்டமாக, விவசாயிகள் தங்களது பட்டா நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில் நீண்டகால வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க மரங்களை வளர்க்க வனத்துறை ஊக்குவித்து வருகிறது. இதற்காக வனத்துறை நர்சரிகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு இலவசமாக விநியோகம் செய்யப்படுவதுடன், நடவு செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
தற்போதைய தலைமுறையினர் நடவு செய்யும் மரங்கள், அடுத்த தலைமுறையினருக்கு மிகப்பெரிய வருமானத்தைத் தரக்கூடிய சொத்தாக அமையும். மேலும், பட்டா நிலங்களில் நடவு செய்யப்படும் மரங்கள் தொடர்பாக விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. வனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டவோ, விற்பனை செய்யவோ முடியாது எனப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்றும், விவசாயிகளின் நலனுக்காக உரிய விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வனத்துறையின் இத்திட்டத்தைப் பயன்படுத்தி தங்களது நிலங்களில் மதிப்புமிக்க மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பொருளாதார முன்னேற்றம் அடைவதுடன், அடுத்த தலைமுறைக்கும் பயனுள்ள சொத்துகளை உருவாக்க வேண்டும் என வனச்சரக அலுவலர் குப்புசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
பேட்டி ;- விழுப்புரம் வனச்சரக அலுவலர் குப்புசாமி







