நாகை அருகே கோர விபத்து: லாரி – பொலிரோ நேருக்கு நேர் மோதி காவலர் பலி;
நாகப்பட்டினம் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், தேவர் ஜெயந்தி பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பிய காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி பாதுகாப்புப் பணிக்காக நாகப்பட்டினம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) காவல் ஆய்வாளரின் பொலிரோ வாகனம் (TN 88 K 4674) சென்றிருந்தது. பணி முடிந்து இன்று நாகப்பட்டினம் நோக்கி அந்த வாகனம் திரும்பிக் கொண்டிருந்தது. முன்னதாக திருவாரூரில் காவல் ஆய்வாளர் இறங்கிவிட்ட நிலையில், வாகனத்தை திருத்துறைப்பூண்டி கீழப்பனையூரைச் சேர்ந்த முருகப்பாவின் மகன் காவலர் ஜனார்த்தனன் (வயது 2020 பேட்ச், PC 609, SCDKV) ஓட்டி வந்தார்.
நாகப்பட்டினம் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட திருக்கண்ணங்குடி ஆர்ச் அருகே வாகனம் வந்தபோது, எதிரே வாஞ்சூரில் இருந்து அரியலூர் நோக்கி கரி ஏற்றி வந்த லாரியும், பொலிரோ காரும் கண் இமைக்கும் நேரத்தில் பலமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த பயங்கர விபத்தில் காரை ஓட்டி வந்த காவலர் ஜனார்த்தனன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான லாரியை நன்னிலம் வட்டம் கீழச்சன்னநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் (47) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் காவல்துறையினர், உயிரிழந்த காவலர் ஜனார்த்தனனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







