நாகை மாவட்டம் :
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஒரு சாகசக் காட்சி படமாக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சண்டைப் பயிற்சியாளர் (ஸ்டண்ட் மாஸ்டர்) மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட காட்சி வீடியோக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அவர் காருடன் பறந்து விழும் சாகசத்தில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து, காரில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம், நாகை மாவட்டம் விழுந்தமாவடி அலம் பகுதியில் இடம்பெற்றது. ஒரு கார் வேகமாக பறந்து கீழே விழும் சாகசக் காட்சியில், மோகன்ராஜ் ஈடுபட்டிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இல்லாததால் அவர் காரின் உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டதும், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, இயக்குநர் பா.ரஞ்சித், மற்றும் படக்குழுவில் இருந்த ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் நாகை மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த துயரமான நிகழ்வைத் தொடர்ந்து, திரைப்படங்களில் சாகசக் காட்சிகள் செய்யும் ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன.