பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில், ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் காரில் இருந்து குதிக்கும் போது தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது மார்புப்பகுதியில் திடீரென வலி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனே அவரை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகின்றன. காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ள இக்காட்சிகள் திரையுலகத்தினரிடையே கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மோகன்ராஜின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‘வேட்டுவம்’ படக் குழுவினர் இவரது மரணத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.