“Big Beautiful Bill” மசோதாவை ஒட்டிய கருத்து வேறுபாடே முக்கியக் காரணமா ?
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் கீழ் அரச செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் DOGE துறையை உருவாக்கி அதற்கான தலைமை ஆலோசகராக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்கை நியமித்தார். தற்போது, அதே பதவியில் இருந்து மஸ்க் விலகியிருப்பது சர்வதேச அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுற்றுப்பாதை நடவடிக்கைகள் :
அதிபர் ட்ரம்பின் உத்தரவின்பேரில், அரசு செலவுகளை குறைக்கும் நோக்கில், மஸ்கின் ஆலோசனையின்படி ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சில நிதி உதவித் திட்டங்களும் இரத்து செய்யப்பட்டன. இதனால் ட்ரம்ப் மற்றும் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்று வந்தன.
அமெரிக்க செனட் அவையில் சமீபத்தில் “Big Beautiful Bill” என்ற பொருளாதார மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிக வரிச்சலுகைகள் அடங்கியுள்ளன. ஆனால், இதனால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்த மசோதா அழகாகவோ பெரியதாகவோ இருக்கலாம்; ஆனால் இரண்டும் சேர்ந்து இருக்குமா என்பது கேள்வி” என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
பதவி விலகல் அறிவிப்பு :
இதையடுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க்,
“சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடைந்துள்ளது. அரசின் செலவுகளை குறைக்கும் வாய்ப்பு அளித்த அதிபர் ட்ரம்பிற்கு நன்றி. செயல்திறன் மேம்பாட்டு துறை தொடர்ந்து வலுப்பெறும் என்பதில் நம்பிக்கை உள்ளது”
என்று பதிவிட்டார்.
பின்னணி மற்றும் விளைவுகள் :
2024 அதிபர் தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்காக எலான் மஸ்க் ரூ.2,500 கோடிக்கு மேல் செலவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் ஜனவரி மாதம் பதவியேற்ற ட்ரம்ப், அவரை DOGE துறையின் தலைமை ஆலோசகராக நியமித்தார்.
இந்நிலையில் மசோதாவை ஒட்டி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், சமீபத்தில் டெஸ்லா நிறுவன பங்குகள் சரிந்துவருகிறது. எனவே தனது நிறுவனங்களுக்கு மீண்டும் முழு கவனம் செலுத்த மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.