நடப்பு ஆண்டின் ஐபிஎல் சீசனில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் இரண்டிலும் படுமோசமாக விளையாடிவரும் சிஎஸ்கே அணி, நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சிலும் சோடை போனது ரசிகர்களை வேதனையில் தள்ளியது.
அணியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார் என்று சுட்டிக்காட்ட கூட ஒருவரும் இல்லை, இவர்களின் மோசமான பேட்டிங்கால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட நூர் அகமது மற்றும் கலீல் அகமது இருவருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை.
அதிக விக்கெட்டுகள் பட்டியலில் நூர் அகமது, கலீல் அகமது இருவரும் டாப் லிஸ்ட்டில் இருந்த நிலையில், அதிக ரன்கள் பட்டியலில் சிஎஸ்கே வீரர்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கின்றனர்.
இப்படி பாதி சீசனிலேயே மோசமான நிலைக்கு சென்றுள்ள சிஎஸ்கே அணி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வேதனையுடன் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

சிஎஸ்கே திரும்பி வருவார்கள் என நினைக்காதீர்கள்..
எப்போதும் சிஎஸ்கே அணிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துவரும் அம்பத்தி ராயுடு, ஒருமுறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இரண்டு அணிக்காகவும் கோப்பை வென்றுள்ளீர்கள் உங்களுக்கு எந்த அணி விருப்பமான அணி என்ற கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பதிலளித்துள்ளார். அதேபோல சிஎஸ்கேவுக்காக ஆர்சிபி அணியை விமர்சித்து டிரெண்டிங்கிலும் இருந்தார்.
இப்படி எப்போதும் சிஎஸ்கேவை விட்டுக்கொடுக்காத அம்பத்தி ராயுடு, இந்தமுறை அவர்கள் இனி திரும்பி வருவார்கள் என நம்பாதீர்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மும்பைக்கு எதிரான தோல்விக்கு பின் சிஎஸ்கே குறித்து பேசிய ராயுடு, “சிஎஸ்கே அணி 7 மிடில் ஓவர்களில் வெறும் 35 ரன்கள் மட்டுமே அடித்தது. அதுதான் அவர்களுக்கு தோல்வியை தேடித்தந்தது. டி20 கிரிக்கெட்டில் தற்போது யாரும் அப்படி விளையாடுவதில்லை. ஆட்டம் பரிணமித்துள்ளது. ஐபிஎல் போன்ற அப்டேட்டான டி20 லீக்கில் மிடில் ஓவர்களில் கூட நீங்கள் ஆரோக்கியமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்ய வேண்டும்” என்று பேசினார்.
இதற்குபிறகு சிஎஸ்கே கம்பேக் கொடுக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இங்கிருந்து சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, ஏனென்றால் அவர்களுக்கே அந்த நோக்கம் இல்லை. அவர்கள் அடுத்த சீசன் குறித்து யோசிக்க தொடங்கிவிட்டார்கள், தோனியும் போட்டிக்கு பின் அதையே பேசியுள்ளார். இதனால் அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என நினைக்காதீர்கள்” என்று பேசியுள்ளார்.