கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
காவிரியின் கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மோட்டார் பாசனம் மூலம் ஒரு சில ஆயிரம் ஏக்கருக்குத் தண்ணீர் பாய்ச்சப்பட்டாலும், பெரும்பான்மையான விவசாயிகள் பருவமழை மற்றும் காவிரி பாசன வாய்க்கால் தண்ணீரை நம்பியே ஏக்கருக்குச் சுமார் 40,000 ரூபாய் வரை கடன் வாங்கிச் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பருவமழையும் பொய்த்துப் போய், பாசன வாய்க்கால்களிலும் காவிரி நீர் வந்து சேராததால் பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சீர்காழி அருகே உள்ள குமாரநத்தம், வைத்தீஸ்வரன் கோயில், காரைமேடு, அண்ணன் கோயில், மேலச்சாலை, வடபாதி, காவல்புரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில், மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
கண்முன்னே பயிர்கள் கருகுவதைக் காணச் சகிக்காத விவசாயிகள், வேறு வழியின்றி விவசாயக் கூலித் தொழிலாளர்களின் உதவியுடன் குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து வயல்களில் தெளித்துப் பயிர்களைக் காப்பாற்றும் கடைசி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அவல நிலை அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்குத் தமிழக அரசு உடனடியாக உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி:
- முருகேசன் (தமிழக காவிரி விவசாய சங்க மாவட்ட தலைவர்)
- காந்தி (விவசாயி குமாரநத்தம்)







