கிரிக்கெட் ரசிகர்களால் ‘சின்ன தல’ என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இந்திய கிரிக்கெட் அணிக்காக பல ஆட்டங்களை வழங்கியதோடு, ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதாலும், தமிழக ரசிகர்களிடையே பெரும் மன்னிப்பைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘டிரிம் நைட் ஸ்டோரிஸ்’ (DKS) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் மூலம் சுரேஷ் ரெய்னா தமிழ் திரையுலகில் காலடி எடுக்கிறார். இப்படத்தை லோகன் என்பவர் இயக்க, இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்க உள்ளார்.
இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோவை சிவம் தாபே வெளியிட்டார். அதன்பின்னர், சுரேஷ் ரெய்னா வீடியோ கால் மூலம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது :
“தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. பல போட்டிகளில் இங்கு விளையாடியுள்ளேன். ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழக மக்கள் எனக்கு அளித்த அன்பும் ஆதரவும் காரணமாக தமிழில் நடிக்க முடிவு செய்தேன்” என்றார்.
சுரேஷ் ரெய்னாவின் இந்த புதிய முயற்சி அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.