கான்பூர் (உத்திரப்பிரதேசம்):
மருத்துவ துறையில் பயிற்சி இல்லாதவர்கள் தலைமுடி மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால், இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த அனுஷ்கா திவாரி மற்றும் அவரது கணவர் சவுரப் திரிபாதி ஆகியோர், ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் என்ற பெயரில் ஒரு மருத்துவமனை நடத்தி வந்துள்ளனர். இருவரும் பல் மருத்தவர்களாக இருந்தனர்.
இந்த மருத்துவமனையில், கடந்த மார்ச் 13ஆம் தேதி 39 வயதான வினீத் துபே தலைமுடி மாற்று அறுவைச் சிகிச்சை செய்தார். மறுநாளே முகம் வீங்கி, கடுமையான வலியுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மனைவி ஜெயா, மாநில முதலமைச்சர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், குஷாக்ரா கட்டியார் என்பவர் தாமாக முன்வந்து, தனது சகோதரரும் மென்பொருள் பொறியாளருமான மாயங்கிற்கும் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அதே மருத்துவமனையில் தலைமுடி மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மார்பு வலி, முகம் வீக்கம் ஏற்பட்ட நிலையில் மறுநாளே உயிரிழந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார்களின் அடிப்படையில், மருத்துவமனையில் பயிற்சி இல்லாத நபர்கள் தலைமுடி மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதாகவும், திவாரி மற்றும் திரிபாதி இருவரும் பல் அறுவைசிகிச்சையில் மட்டும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவ அனுமதியோ, தகுந்த பயிற்சியோ இல்லாமல் நவீன சிகிச்சைகள் மேற்கொண்ட தம்பதியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வழிவகைகள் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.