மயிலாடுதுறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஆய்விற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து அலுவலக சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் சாலை உள்வாங்கியதால் முன் சக்கரம் பள்ளத்தில் சிக்கி பரபரப்பு :-
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ள நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் பெரிய பள்ளங்கள் உருவாவதும், அவற்றைச் சீரமைப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு அரசு பேருந்து ஒன்று தகுதிச் சான்று பெறுவதற்காக கும்பகோணத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.அலுவலகத்தின் உள்ளே அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், மயிலாடுதுறை–பூம்புகார் பிரதான சாலையில் உழவர் சந்தை அருகே சாலை ஓரத்தில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.
அப்போது, பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென சாலை உள்வாங்கியதால், பேருந்தின் முன்சக்கரம் பள்ளத்தில் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கீழே இறங்கிப் பார்த்தபோது, சாலை உள்வாங்கியதில் பேருந்தின் சக்கரம் சிக்கியிருப்பது தெரியவந்தது. அருகிலேயே பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி இருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்து ஆய்வுக்காகக் கொண்டுவரப்பட்டதால் பயணிகள் யாரும் இல்லாத நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மயிலாடுதுறை நகரில் இதுபோன்று சாலைகள் உள்வாங்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, நிரந்தரத் தீர்வு காண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















