சென்னை: நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் செய்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிராக நடிகை ரோகிணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “நடிகை கவுரி கிஷனிடம் உடல் எடை குறித்து கேட்டு உருவ கேலி செய்ததையும், தனது தரப்பு கருத்தை வெளிப்படுத்த அவளை அனுமதிக்காததையும் கடுமையாக கண்டிக்கிறேன். அந்த நிகழ்வில் யாரும் கிஷனுக்கு ஆதரவாக நிற்காதது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
“அந்த பத்திரிகையாளர் கேட்டது நகைச்சுவைக்காகவோ, படத்துக்கு தொடர்புடைய கேள்வியோ இல்லை. ஒரு பெண் நடிகை தன்னுடைய தரப்பை பேச முயற்சிக்கையில், செய்தியாளர் என சொல்லிக் கொள்ளும் ஒருவர் கத்தி பேசிக் குறுக்கிட்டது மிகவும் அவமானகரம். மீடியாவும், படக்குழுவினரும் ஒருவரை ஒருவர் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவர் அவமானப்படும்போது மற்றவர்கள் அமைதியாக இருப்பது சரியல்ல. அந்த நிகழ்வில் கவுரி காட்டிய தைரியம் பாராட்டத்தக்கது” என்று ரோகிணி தெரிவித்துள்ளார்.
சர்ச்சையின் பின்னணி:
‘96’ திரைப்படத்தில் ஜானு எனும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவுரி கிஷன். தற்போது அவர் நடித்துள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது, “பாடல் காட்சியில் கிஷனை தூக்கினீர்களே, அவருடைய உடல் எடை என்ன?” என ஹீரோ ஆதித்ய மாதவனிடம் ஒரு யூடியூபர் கேட்ட கேள்வி விவாதத்தை ஏற்படுத்தியது.
பின்னர், அந்த கேள்வி குறித்து பேட்டியொன்றில் கவுரி கிஷன், “அவர் மூளை இல்லாமல் பேசியவர் போல இருந்தார். நடிகைகளின் திறமையை விட உடல் எடை பற்றி பேசுவது தவறு” என்று பதிலளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பில் அதே யூடியூபர், கிஷனிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கிஷன், “என் வெயிட் பற்றி கேட்டது நீங்கள்தானா?” என சாந்தமாக கேட்டபோது, அந்த யூடியூபர் கத்தி பேசத் தொடங்கினார்.
அதற்கு கிஷன், “நீங்கள் கேட்டது பாடி ஷேமிங். ஒரு நடிகையின் நடிப்பு, திறமை குறித்து அல்லாமல் உடல் எடை பற்றி கேட்பது முட்டாள்தனமான கேள்வி” என்று தைரியமாக பதிலளித்தார்.
அந்த நேரத்தில் சில யூடியூபர்கள் அவரை பேசவிடாமல் கூச்சலிட்டனர். அவருடன் இருந்த படக்குழுவோ அல்லது பத்திரிகையாளர்களோ கூட அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை.
விவாதம் கடுமையாகி, கிஷன் தன் தரப்பை முழுமையாக விளக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, கண்ணீர் விட்டார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் கவுரி கிஷனுக்கு ரசிகர்கள், ரசிகை நண்பர்கள், நடிகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை ரோகிணியின் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

















