கன்னியாகுமரி மாவட்டம்: இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தலைக்கவசம் அணிவோம் மற்றும் போதைப் பொருள்களை தவிர்ப்போம் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் 10 கிலோமீட்டர் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது- இதில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னெடுப்பில் பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 கிலோமீட்டர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியும் பெண்களுக்கு ஐந்து கிலோமீட்டர் மாரத்தான் போட்டியும் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஏராளமானோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியானது இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் நினைவு வளைவு முன்பு தொடங்கப்பட்டு கன்னியாகுமரி ரயில் நிலையம் மகாதானபுரம், ஜீரோ பாயிண்ட் வழியாக மீண்டும் திருவள்ளுவர் நினைவு வளைவு பகுதியில் வந்து நிறைவடையும். மாரத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற இரு பிரிவினருக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு ரூ 7500 மூன்றாம் பரிசு ரூ. 5000 ரூபாய் வழங்கப்பட்டது மேலும் பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் ஐந்து வயது ஆறு வயது என குழந்தைகளும் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.













