சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடந்ததாகும் வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
2024 டிசம்பர் 23-ஆம் தேதி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறி, ஞானசேகரன் என்பவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி, சைதாப்பேட்டை 9-ஆம் நீதிமன்றத்தில் 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஞானசேகரன் ஒரே குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார்.
பின்னர், வழக்கு மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஞானசேகரன் தரப்பில், குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், ஆதாரங்கள் இல்லையென்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் 8ஆம் தேதி அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடங்கியது. தினசரி சாட்சிகள் ஆஜராகி மொத்தமாக 29 பேர் சாட்சி அளித்தனர். காவல்துறை தரப்பில் 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மே 20ஆம் தேதியுடன் அனைத்து சாட்சி மற்றும் குறுக்கு விசாரணைகள் முடிந்தன. இருதரப்பும் இறுதி வாதங்களை வழங்கினர்.
இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு, இன்று (ஜூன் 2) சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.
தண்டனை விவரத்தில், குற்றவாளிக்கு குறைப்பு இன்றி 30 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ரூ. 90,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நன்னடத்தை அடிப்படையில் தண்டனை குறைக்கப்படும் வழக்குகள் உள்ளன. ஆனால் இந்த வழக்கில், 30 ஆண்டு சிறை வாழ்க்கை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.