பெங்களூர்: கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில், ஒரு வெளிமாநில பெண் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்த அந்த பெண், பின்னர் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
28 வயதான பீகாரைச் சேர்ந்த பங்குரி மிஸ்ரா என்பவர், தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் பெல்லந்தூர் பகுதியில் சென்ட்ரல் மாலின் அருகே சென்றுகொண்டிருந்த போது, ஒரு ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கால் மீது ஆட்டோ சக்கரம் ஏறிவிட்டதாகக் கூறி, ஆத்திரமடைந்த அவர், தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அந்த ஆட்டோ டிரைவரை அடித்தார்.
வீடியோவாக பதிவாகி வைரல்
அந்தக் காட்சிகள் அருகில் இருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டன. இந்த வீடியோ வைரலானதுடன், பெண்ணின் செயலை பலரும் கண்டித்தனர். சேவையில் இருந்த 33 வயது ஆட்டோ டிரைவர் லோகேஷ், பெல்லந்தூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மன்னிப்பு மற்றும் வருத்தம்
பின்னர் வெளியான ஒரு புதிய வீடியோவில், குறித்த பெண் தனது கணவருடன் லோகேஷை நேரில் சந்தித்து, தன்னுடைய செயலைக் குற்றமாக உணர்ந்ததோடு, “கர்ப்பம் காரணமாக நான் பதற்றத்தில் செயல்பட்டேன்; குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் கோபமாகி தவறாக நடந்துகொண்டேன்” என்று கூறினார். அவர் மற்றும் அவரது கணவர் இருவரும் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
லோகேஷின் அமைதியான பதில்
இந்த வீடியோவில், ஆட்டோ டிரைவர் லோகேஷ் எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக இருந்தார். மேலும், “நான் இந்த ஊரையும், இந்த மக்களையும் நேசிக்கிறேன். இதில் எந்த வகையான உள்நோக்கும் இல்லை” என அந்த பெண் தெரிவித்தார்.
சமூகவலைதளங்களில் எதிர்ப்பு, கன்னட அமைப்புகள் வலியுறுத்தல்
இந்த சம்பவம், பெங்களூருவில் மொழி மற்றும் பிராந்திய அடிப்படையிலான உணர்வுகளை தீவிரமாகக் கிளப்பியது. குறிப்பாக, ஒரு கன்னட ஆட்டோ டிரைவரை வெளிமாநில பெண் ஒருவர் அடித்ததாக பரவிய இந்த வீடியோ, பல கன்னட அமைப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக காவல்துறையை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெங்களூருவில் வாழும் வெளிமாநில மக்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையேயான தளர்வான உறவை மீண்டும் சீர்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.