நடிகர் ரவி மோகன், தனது கால்ஷீட் ஒதுக்கீட்டையும், ஏற்பட்ட நிதி இழப்பை காட்டி, கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யூனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக ரூ.9 கோடி இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
மனுவில் அவர் கூறியதாவது:
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியதையும், அதனைத் தொடர்ந்து மார்ச் முதல் ஜூன் வரை கூடுதல் நாட்கள் ஒதுக்கியதையும் தெரிவித்துள்ள ரவி மோகன், தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தப்படி படப்பிடிப்பைத் தொடங்காததால், தன்னால் வேறு திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு, அவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டதோடு, தயாரிப்பு நிறுவனம் தயாரித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர் உட்பட, எதிர்வரும் படங்களை விற்கவும் வெளியிடவும் தடையிதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், முன்பணமாக வழங்கப்பட்ட ரூ.6 கோடியைத் திருப்பிக் கொடுக்க, தயாரிப்பாளரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கில் நடைபெற்ற வாதங்கள்:
வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் நடிகர் ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகைபாலன், “ரவி மோகன் முன்பணத்தை திருப்பிக்கொடுப்பதற்கு தயாராக உள்ளார். ஆனால் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் அந்த தொகை திருப்பிக்கொடுக்கலாம் என்றும், கடந்த நாட்களில் வேறு படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது” என்றும் வாதிட்டார்.
தயாரிப்பு நிறுவன தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “இந்த மனு விசாரணைக்கு உட்பட்டது அல்ல. ஒப்பந்தத்தை மீறியவர் ரவி மோகனே. அவர் பராசக்தி எனும் மற்றொரு படத்தில் நடித்துள்ளார்” எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்பு வழக்குகளுடன் இணைத்து விசாரணை:
இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தயாரிப்பு நிறுவனம் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை, தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்குடன் இணைத்து, ஜூலை 23ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
















